தமிழ் மெய்யியல் - அறிவு நிலைகள் பத்து நுண்மான் நுழைபுலம் பாட்டுநெறி
இரா.குப்புசாமி(ஆர்.கே)
ஆங்கில மகாகவி மில்டன் 'இழந்த சொர்க்கம்' என்ற தலைப்பில் ஒரு காப்பியத்தை இயற்றினார். அது பைபிள் கதையை அடிப்படையாகக் கொண்டது. இறைவன் உண்டாக்கிய சொர்க்க பூமியான ஏதேன் தோட்டத்தில் நிர்வாணமாக விடப்பட்ட ஆதாமும் ஏவாளும் இரண்டு குழந்தைகள் போல் தூய வாழ்க்கை வாழ்கின்றனர். இந்திய ஞான மரபில் உள்ள சொற்களைக் கொண்டு சொல்வதானால் அவதூதர்களின் வாழ்க்கை வாழ்கின்றனர். அந்த வாழ்க்கையைத் தன் கவிதாஞானத்தின் மூலம் கண்ட மகாகவி மில்டன் அற்புதமான பாடல்களால் வர்ணிக்கிறார். ஆனால் அவருக்குப் பின்வந்த ஆங்கிலக் கவியும், விமர்சகரும் ஆங்கில அகராதி தயாரித்தவருமான சாமுவேல் ஜான்சன் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. தூய அந்த ஞான நிலையை சாதாரண மனிதனான மில்டன் எவ்வாறு கற்பனை செய்ய முடியும்? அது யாராலும் இயலாது. ஏசுவைப் போன்ற தெய்வநிலையை மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாது. கவிதைக்கலை, ஞானநிலையை எட்ட முடியாது என்று மதவாத அரசியல் பேசினார்.
ஆனால் அவருக்குப் பின் வந்த ஆங்கிலக் கவி வில்லியம் வேர்ட்ஸ்வர்த் கவிதா எழுச்சியின் மூலமே சமாதி நிலையை அடைந்து எழுத்தில் காட்டுகிறார். அழகான இயற்கைச் சூழல் கொண்ட 'டின்டெர்ன் ஆபி' (Tintern Abbey) என்ற இடத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உன்னதமான கவிதை வரிகளில் படம் பிடித்துக் காட்டுகிறார். இந்தக் கவிகளுக்கு எந்த யோகப் பயிற்சியும், அது பற்றிய கேள்விஞானமும் கூட கிடையாது. ஆனால் இயல்பாக கவிதை உணர்ச்சியின் ஆவேசத்தால், யோகத்தின் எட்டாவது படியான சமாதி என்ற ஞானநிலையை அடைகின்றனர். சமாதி நிலையில் எண்ணம் அற்றுப் போகும். எண்ணம் அற்றவுடன் துன்பமும், கால உணர்வும் அற்றுப்போகும். பேச்சு அற்றுப் போகும். அத்துடன் மூச்சும் நின்றுவிடும்.
ஆனால் உடலில் உயிர் தங்கும். கவிதையின் புனிதம் அந்த வரிகள்:
... that serene and blessed mood,
In which the affections gently lead us on,
Until, the breath of this corporeal frame
And even the motion of our human blood
Almost suspended, we are laid asleep
In body, and become a living soul:
While with an eye made quite by the power
Of harmony, and the deep power of joy,
We see into the life of things.‘
எப்பொருள் எத்தன்மைத்தாயினும் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற ஞான விதிக்கு இக் கவிதையின் கடைசி வரி சான்றாக அமைவது வியப்பைத் தரும் உண்மை. அறிவர்கள் எக்காலத்திலும் எவ்விடத்திலும் ஒரே அலைவரிசையில் அனுபவம் பெறுவர் போலும். சித்தர்களின் ‘தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்' (பத்ரகிரியார்) ‘செத்தாரைப் போலே திரி' (பட்டினத்தார்) போன்ற ஞான அனுபவங்களுக்கும் ஐந்தாவது வரி சான்று பகரும். உச்சபட்ச அனுபவ நிலையில் கவியும், ஞானியும் ஒன்றே என்பதையே இவை காட்டுகின்றன. அதனால்தான் போலும் ஆங்கிலக் கவி ஜான் கீட்ஸ் அமரத்துவம் பெற்ற கவிதை வரிகளால் இந்த ஆழமான மெய்யியல் உண்மையை வெளிப்படுத்தினான்: "Beauty is truth, truth beauty - that is allYe know on earth, and all ye need to know'‘
அழகே உண்மை, உண்மையே அழகு. இதை மட்டும் நீ
மண்மீது அறிய முடியும்; அறிய வேண்டியதும் இது மட்டுமே'
மனம் கடந்த ஞான அனுபவம் தனிமனிதச் சொத்து. ஞானக்கவிதை மனித குலத்தின் பொதுச் சொத்து. எனவே ஞானியை விட உயர்ந்தவன் ஞானக்கவி. கீட்ஸ் இறந்த பொழுது உலகப் புகழ்பெற்ற இரங்கல் கவிதைகளுள் ஒன்றை ஷெல்லி எழுதினான். Adonais என்ற அக்கவிதையில் கவிஞனுக்கு அவன் தரும் இடம் ஞானிக்கும் இல்லை. ஒரே நேரத்தில் இரண்டு உலகங்களிலும் அமரத்தன்மை பெற்றுவிட்டாய். இந்நேரம் உன் ஆன்மா அமர உலகில் அமரர்களுக்கு கவி அமுதம் அளித்துக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் மண்மீது மனிதர்கள் உன் அமுதக் கவிதைகளிலிருந்து நீ அளிக்கும் உயிர்ச்சாற்றை அருந்திக்கொண்டிருப்பர் என்று எழுதுகின்றான்.
ஒவ்வொரு நாள் விடிகாலையில் எழுந்ததும் முதல்வேலையாக குரு நித்ய சைதன்ய யதி செய்தது இரண்டு வேலைகள்: ஒன்று, சேலம் இசைவாணி ஜெயலட்சுமி பாடிய தேவார, திருவாசகங்களைக் கேட்டுக் கண்ணீர் விடுவது; (‘என் மரபின் உன்னதத்தை இது நினைவுறுத்தும்' என்பார்) இரண்டாவது ஆங்கில ரொமாண்டிக் கவிஞர்களான வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, கீட்ஸ், பைரன் ஆகியோரின் கவிதைகளை வாசிக்கச் சொல்லிக் கேட்பது. வாழ்க்கையை இவ்வளவு உக்கிரத்துடன் வாழ வேண்டும். 24 வயதே வாழ்ந்தவன் கீட்ஸ்; 26 வயதே வாழ்ந்தான் ஷெல்லி; பைரவனுக்கு 36. ஆனால் இந்த இரண்டு அல்லது மூன்று பத்தாண்டுகளில் அவர்கள் அனுபவித்த வாழ்வனுபவத்தின் ஆழம் தேவர்களுக்கும் எட்டாதது என்பார்.
ஒரு கவிஞனாக நான் வாழ்ந்த கணங்கள் மட்டுமே எனக்குத் திருப்தியை அளித்துள்ளன. இது அனுபவ உண்மை, அனுபவித்தால் அன்றிச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. அதனால்தான் ‘மகா' என்ற சொல்லை ஜெர்மானிய மகா கவி ‘கதே'வுக்கு மட்டும் வழங்கினேன் என் ‘உயர்த்திரு'என்ற கவிதைத் தொகுப்பில்.
தொல்காப்பியத்தில் இலக்கணத்தை எழுத்து, சொல், பொருள், யாப்பு அல்லது செய்யுளியல் என்ற அளவோடு நிறுத்திக் கொண்டான் தொல்காப்பியன். அணி இலக்கணத்தை வடநூலார் போல விரிவாக எழுதவில்லை. ஏன் என்ற கேள்வி தமிழ் மரபின் உண்மை மெய்யியலை அறியப் பயணப்படும் பாதையில் நம்மை அழைத்துச் செல்லும். உவமை, உருவகம், உள்ளுறை, உவமம், இறைச்சிப்பொருள் என்பவனற்றோடு நிறுத்திக்கொண்டான் தொல்காப்பியன். சொல் அணிகள் (Figures of Speech) மற்றும் பொருளணிகள் (Figures of thought) என நூற்றுக்கணக்கில் அணிகளை விரித்து உரைப்பது வடமொழியிலும் மேலை நாட்டு இலக்கண நூல்களிலும் காணப்படுகின்றது. வடமொழித் தாக்கத்தினால் மேம்போக்கான இந்தச் சொல் மற்றும் கருத்து ஜாலங்களை இடைக்காலத் தமிழ்ப் புலவர்கள் போலி செய்து உண்மைத் தமிழ் மெய்யியலை மறந்தனர். மறந்ததால் பிறவற்றைத் தழுவினர். மக்களையும் மறந்து போகச் செய்தனர்.
தொல்காப்பியம் வெறும் இலக்கண நூலாகக் கருதப்படுகிறது. மற்ற மொழி இலக்கண நூல்களைப் போன்றது தானே இதுவும் என்பது தவறான பார்வை. அளக்கும் அளவுகோலே தவறு. அது ஒரு மெய்யியல் நூல். மனித வாழ்க்கையைப் பற்றிய மெய்யியல் நூல் மட்டுமல்ல, வாழ்க்கையை ஆராய உதவும் மொழியின் மெய்யியலையும் ஆழ்ந்து உணர்ந்து வெளிப்படுத்தும் மறை. இது உண்மையா? ஒவ்வொரு தமிழறிஞரும் இந்த நோக்குடன் தொல்காப்பியத்தைப் படிக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
'காப்பியம்' என்ற சொல் சாதாரணமாகப் பெரும் கதையாடல்களைக் குறிக்கும். இராமாயணம், மகாபாரதம், ஐம்பெருங்காப்பியங்கள், கிரேக்க மொழியில் இலியாது, ஒதிஸி என்று பல. ஆனால் காப்பியம் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழ் தொல்காப்பியன் கதைகளைக் கூறவரவில்லை. ஏன்? மலையைத் தோண்டி எலியைப் பிடிக்க முயல்வதல்ல ஆதித் தமிழர் நெறி. வெளிப்படையாக, விஞ்ஞான மொழியில் நேரிடையாக உண்மையை உரைப்பது, ‘காப்பியம்' என்ற சொல் காப்பு+இயம் என்று பிரியும். ‘இயம்' எனில் இயற்றுதல், எதை? காப்பை. எதைக் காப்பது? வாழ்வை, குறிப்பாக உயிரை. உயிர், உடல், உலகம், இறை, வாழ்தல்-இவற்றின் உண்மைகள் என்ன? என்று ஆராய்தலே தத்துவம் அல்லது மெய்யியல் எனப்படும். இவற்றின் எல்லாக் கூறுகளையும் மிகத் தெளிவாக, மிக ஆழமாக ஆராய்கிறது தொல்காப்பியம். எனவே அது முழுமையானதோர் மெய்யியல் நூல். அதன் மெய்யியல் கூறுகளில் சிலவற்றை ஆராய்ந்தால் இந்த உண்மை புலப்படும். இலக்கியம் வாழ்விலிருந்து பிறப்பது, வாழ்வை செம்மைப்படுத்த வழி கோலுவது. வாழ்வைச் செம்மைப் படுத்தலே தத்துவத்தின் தலையாய நோக்கம். மிகச் சிறந்த வாழ்க்கை எது? அதை நாம் அடைவது எப்படி? இந்தக் கேள்விகளுக்கு விடைகாண முயல்பவையே உலகின் எல்லாத் தத்துவ நூல்களும். அவற்றுள் தனித்தன்மை வாய்ந்தவை தமிழ் மரபின் தத்துவ நூல்கள்.
வாழ்வை அகம், புறம் என்று முதலில் இரண்டாகப் பிரிக்கின்றது தமிழ் இலக்கண மரபு. மொழி மற்றும் இலக்கணம் என்பது வாழ்க்கையின் கண்ணாடி. பிம்பங்கள் மாறுபாடு இன்றித் தெளிவாக உண்மையாகக் காணப்படுகின்ற அளவிற்கு வாழ்க்கை தெளிவாகப் புரியும். பயணம் சுகமாக இருக்கும். அகம், புறம் என்ற முதல் பிரிவை மேலும் நுட்பமாக்கி அகத்தை அகம், அகப்புறம் என்று இரண்டாகவும், புறத்தை புறம், புறப்புறம் என்று இரண்டாகவும் பகுப்பர் இராமலிங்கர் போன்ற தமிழ் ஞானிகள்.
புறப்புறத்திலிருந்து, இயற்கையிலிருந்து மனதுக்கு உணர்வு திரும்புவது வரை புறம். தனித்த சீவனிலிருந்து பொதுவான அகம் என்ற ஆத்மாவுக்கான பயணம் ‘அக இலக்கியம்.' ஆதித் தமிழர் வாழ்வில் இலக்கியமே ஞானம். ஞானம் உணர்வுக்கூர். ஒருசிலருக்கன்றி, யாவருக்குமாம் சமுதாய நெறி ஞானம்.
புறப்புறம் என்பது பஞ்சபூதங்களாலான புற உலகம். அதை அறிய உதவும் அறிவுக் கருவிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய உடலும். இவை இரண்டும் ஒரே சொல்லாகக் குறிக்கப்படுவது தமிழ் மெய்யியலின் தனிச்சிறப்பு. ஏனெனில் இவை இரண்டும் ஒரே வகையான பொருளால் ஆனவை. புறப்புற உலகில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவை மனித உடலில் தோன்றும், பிரதிபலிக்கும். அதேபோல் மனித உடலில் ஏற்படும் மாற்றங்களும் புற உலகைப் பாதிக்கும். இந்த உண்மையை கி.பி. 1960களில் தான் மேற்குலகம் அறிந்தது. ரேச்சல் கார்சன் (Rachel Carsen) என்ற பெண்மணி ‘நம்மைச் சுற்றியுள்ள கடல்' என்ற நூலை எழுதிய பிறகு தான் ‘சுற்றுச் சூழல் இயல்' என்ற தனிப்பட்டதோர் அறிவியல் தோன்றிப் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனாலும் ‘‘இயற்கையும் மனித உடலும் ஒன்றே'' என்ற மெய்யியல் உணர்விற்கு அவர்கள் இன்னும் வந்து சேரவில்லை.
தொல்காப்பியன் திணைப்பகுப்பை செய்கின்ற பொழுது இயற்கையை ஒட்டியே மனித மனத்தையும், வாழ்வு அனுபவத்தையும் சமன்பாடாக்கி ஐந்து அகநிலங்களாகப் பிரித்துக் காட்டுவான். இதை ஏ.கே. இராமானுஜன் போன்ற அறிஞர்கள் (Inner landscape) என்று மிகப் பொருத்தமாக மொழிபெயர்க்கின்றனர்.
இயற்கையே முதற்பொருள் மற்றும் கருப்பொருள். இந்த அடித்தளத்தின் மீதே அனுபவம் என்னும் மேல்கட்டுமானம் தோன்றுகிறது. அதை நுட்பமான உணர்வு கொண்ட கவி உள்ளம் செம்மைப்படுத்தி, சுவை கூட்டி, தன் சொத்தாக சமுதாயத்திற்கு விட்டுச் செல்கின்றது. அடிப்படையின்றி மேல்கட்டுமானம் சாத்தியம் அல்ல என்பதை மன அளவிலும் உணர்ந்து அதையொட்டி இலக்கணத்தை அமைத்த ஆதித் தமிழ்ச் சான்றோர் மாபெரும் மனோ தத்துவ ஞானிகள். இது எப்படி?
மனத்தை ‘புறம்' என்ற சொல்லால் குறித்தனர். ஏன்? மனதின் அடிப்படைகள் காலமும், இடமும். இவ்விரண்டுமின்றி அனுபவத்தைச் சொல்ல முடியாது. காலமும் இடமும் செயல்படுவது ‘மனம்' என்ற உணர்வில். இதை உணர்த்த சொற்களும், உவமைகளும் போதும். காலம், மனம் கடந்த நிலையில் அனுபவங்கள் உண்டா? எனில் உண்டு. அவற்றை கடப்பிய அனுபவம் அல்லது ஞான அனுபவம் (Transcendental Experience) என்பர். ‘‘சொல்லாமல் சொன்னதை நினையாமல் நினைந்து'' என்பன போன்ற புதிர்த் தொடர்களால் இவை சுட்டப்படும். இந்தவகை மறை அனுபவங்களை உணர்த்த வந்த இலக்கிய வகை ‘இறைச்சிப்பொருள்' என்று தனித்து வழங்கப்பட்டது.
மனதின் அடிப்படை கால உணர்வும், இட உணர்வும். இதனைக் காலமறிதல், இடனறிதல் என்பார் வள்ளுவர். கி.பி பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய ஜெர்மானிய தத்துவஞானி இமானுவேல் கான்ட், ஏதோ தான்தான் இந்த உண்மையைக் கண்டுபிடித்ததாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறார். இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்குப் பின் வந்த தத்துவவாதிகள் அவரை உலக மகா தத்துவவாதியாகக் கருதி ஆர்ப்பரிக்கின்றனர். வள்ளுவனும், தொல்காப்பியனும் எளிமையான இந்த உண்மையை முன்பே அறிந்திருந்தனர்.
தற்கால உதாரணத்தைக் கூறினால் இது புரியும். மனித மூளையிலே பிணியல் (Pineal) என்ற ஒரு சுரப்பி இருக்கின்றது. அதில் மெலடானின் (Melatanin) என்ற ஓர் திரவம் சுரக்கின்றது. இதுவே உறக்கத்தையும் கால உணர்வையும் தருகிறது. உறக்கம் வராத நோயாளிகளுக்கு இந்தப் பொருள் கொண்ட மாத்திரைகளையும், ஊசியையும் ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். சாதாரண உலகியல் வாழ்க்கைக்கு உறக்கமும், கால உணர்வும் அவசியம். சாலையில் போகின்ற பொழுது கால, இட உணர்வு இல்லை எனில் விபத்து ஏற்படும், அல்லது கிரியா யோகத்தை அதிகமாக அல்லது திடீர் என்று உத்வேகத்துடன் செய்பவர்களுக்கு மனம் அழிந்து, கால இட உணர்வற்று இவ்வாறு விபத்துகள் நேர்வதுண்டு. அதனால்தான் கூர்கிப் போன்ற மேலை நாட்டு ஞானிகள் பிராணாயாமத்தைத் தவிர்கின்றனர். ஆனால் பிராணாயாமமே மனம் கடந்த தூய அறிவு நிலை கொண்ட யோக ஞான அனுபவங்களுக்குக் குறுக்கு வழி. சித்தர் நெறியில் யோகம் எனில் அது வாசியோகத்தையே குறிக்கும்.
யோகத்தின் முடிந்த நிலையில் பிணியல் சுரப்பியில் மெலட்டானின் சுரப்பது மிகவும் குறைந்துவிடும் அல்லது முற்றாக நின்றுவிடும். அப்போது 'அமுதம்' சுரக்கும். அதை உண்ட சித்தர்களுக்கு காலாதீத உணர்வு (Timeless moment) தோன்றும். இதையே 'நித்திய வாழ்வு' (Enternity) என்பர் ஞானிகள்.
மாங்காய்ப் பால் உண்டு மலைமேல் இருப்பார்க்கு
தேங்காய் பால் ஏதுக்கடி-குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி
என்று இந்த திரவத்தை மாங்காய்ப் பால் என்று அழைப்பார் குதம்பைச் சித்தர். கொழுப்பு நீக்கிய தேங்காய்ப் பால் புறப்புற அமுதம் என்பார் இராமலிங்கச் சித்தர். அதை மட்டுமே உண்டு வாழ்வது சித்தர் உணவு நெறி. வாசியோகம் பயின்று புருவ மத்திக்கு உள்ளே உள்ள உயிராகிய மன்றத்தில் இறைஒளியைக் காண்பதே சித்தர் யோகம். கண்டுவிட்டால் மாங்காய்ப் பால் சுரக்கும். அதை உண்ட சித்தர்களுக்கு உலக உணவுகள் தேவைப்படாது.
இவ்வுலக உணவுகளை உண்கின்றவரை மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது என்ற விஞ்ஞான உண்மையை வெளிப்படையாகப் பேசுகின்றனர் சித்தர்கள். ஈரமு மன்புங்கொண் டின்னருள் பெற்றேன்
என்மார்க்க மிறவாத சன்மார்க்கந் தோழி
காரமு மிகுபுளிச் சாரமுந் துவர்ப்புங்
கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊரமு துண்டுநீ யொழியாதே அந்தோ
ஊழிதோ றூழியு முலவாமை நல்கும்
ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் ஜோதிகண் டாடேடி பந்து.
என்று இதற்கு விதியை வகுத்தளிப்பார் இராமலிங்கர்.
தேங்காய்ப் பாலில் தொடங்கி மாங்காய் பாலில் முடிவதே சித்தர் நெறி. ஞானம், தமிழ் மரபில் உடல் சார்ந்தது. அரவிந்த ஆசிரமத்தைச் சார்ந்த ஸ்ரீஅன்னை 'மோட்சம் பெளதீகமானது' (Salvation is Physical)என்பார். இருண்ட அறிவை நிலைத்த ஒளி பெறச் செய்வது ஞானம், அல்லது நிர்வாணம். இருண்ட, ஏழு தாதுக்களாலான ஊன் உடலை ஒளிபெறச் செய்வது சித்தர் நெறி. இவ்விரண்டுக்கும் இடையே இருண்ட வாழ்க்கையும், அது தோன்றுவதற்குக் காரணமான காற்றையும் ஒளிபெறச் செய்வது இடைநிலை யோகம். இதையே சித்தர்கள் ‘வாசியோகம்' என்றும் ‘சிவராஜயோகம்' என்றும் ‘திருவடிஞானம்' என்றும் ‘பிராசாதயோகம்' என்றும் பலபடக் கூறுவர். இவ்வாறு ‘ஒளிச்சுவாசம்' என்ற இரகசியத்தை உணர்ந்து ஆள்பவர்களே பாட்டுநெறி மூலம் கடவுள் நிலையை அடைய முடியும்.
இராமலிங்கரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி இந்த உண்மையை விளக்கும். அவருடைய செய்யுள் நூல்களை ஐந்து திருமுறைகளாக வகுத்து ‘திருஅருட்பா' என்று பெயரிட்டு அவருடைய சீடர்கள் வெளியிட்டனர். ‘அது அருட்பா அல்ல மருட்பா; அருட்பா என்பது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருடைய அருள் ஞானிகளின் மூலம் இறைவனின் வாக்காக வெளிப்படுவது. அவை தேவார, திருவாசகங்கள் மட்டுமே. நம்மைப் போல் நம்மிடையே மனிதராக உலவும் இராமலிங்கர் இயற்றியது சாதாரண செய்யுள்கள்தான். அவை மருட்பாடல்கள். அவற்றை ‘அருட்பா' என்று அச்சிடக் கூடாது' என்று கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் தென்னார்க்காடு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தார். நீதிபதி ஆங்கிலேயர். அவைக்கு நாவலர் முன்பே வந்துவிட்டார். காவலாளி இராமலிங்கரின் பெயரைக் கூறி அழைக்க அடிகளார் உள்ளே நுழைந்தார். அனைவரும் எழுந்து நின்றனர். வழக்குத் தொடுத்த நாவலரும் எழுந்து நின்றார். ‘வழக்குத் தொடுத்த நீரே ஏன் எழுந்து நின்றீர்?' என்று அவரிடம் நீதிபதி கேட்டார். அவருடைய அருள் தோற்றம் என்னை அறியாமல் எழுந்து நிற்கச் செய்துவிட்டது என்றார் நாவலர்.
இவ்வழக்கு பாடல் பற்றியது. எனவே புலவராகிய நீங்கள் பாடுங்கள் பார்க்கலாம் என்று நீதிபதி நாவலரிடம் சொன்னார். யாம் உரைநடையாகத் தொடுப்போம் என்று நாவலர் பதிலளித்தார். சரி, நீங்கள் பாடுங்கள் என்று நீதிபதி அடிகளாரிடம் சொல்ல, கண்களை மூடி மடை திறந்த வெள்ளம் போல் அடிகளார் அருட்பாடல்களைப் பொழிந்தார். மெய்மறந்த அவையினர் வியந்து போயினர். இது ‘அருட்பா' தான் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த வழக்கைப் பற்றிப் பல்வேறுவிதமான விவரணைகள் உள்ளன. ஆனால் அருட்பா, மருட்பா போர் என்பது இரண்டு காலகட்டங்களில் திரு.வி.க. காலம் வரை நீடித்ததைக் காண்கின்ற பொழுது மேலே கூறப்பட்ட கூற்றில் உண்மை இருக்க முடியும் என்றே கருதுகிறேன்.
தொல்காப்பியர் காலம் தமிழ் மரபின் செவ்வியல் காலம். அடையாளம்? காரணப்பெயர்களால் ஆன சொற்களை மட்டுமே நம்பி இலக்கியம் செய்வது செவ்வியல். ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் அறிவுத் தர்க்கம், தத்துவம் இருக்கும்-இன்றைய கணினி மொழியைப் போல. தர்க்கப் பின்னணி, தத்துவப் பின்னணி இல்லாத மொழி விரைவில் அழிந்து படும். ஒரு குறிப்பிட்ட பயன்பாடு கருதியே தத்துவம் தோன்றும்; தர்க்கம் செயல்படும். மனிதன் உயர்திணை. உயர்ந்து கொண்டே சென்று இறைநிலை பெற்று ‘சி' (Chi, psi, consciousness force) ஆற்றல்களை அடைந்து சித்தனாகப் பெருவாழ்வு வாழ வேண்டும். இதுவே தமிழ் மரபின் மெய்யியல், தத்துவம். இத் தத்துவத்தைச் செயல்படுத்தத் தோன்றிய நெறி முறையே சித்தர் நெறியும் யோக ஞானங்களும். மனித உடலின் போலி உருவங்களான கோயில் சார்ந்த சரியை கிரியைகளும், வழிபாடும், சமய காலத்துத் திரிபுகள். அதற்குமுன் அவ்விடத்தை வகித்தவை இலக்கணமும், இலக்கியமும். மொழியின் மூலம் இறை(ச்சி) நிலை அடைதல். எனது தொல்காப்பிய ஆய்வில் கண்டடைந்த முடிபு இது. யாம் கண்டடைந்த மற்றும் இரு முடிபுகள்:
1. கிடைத்திருக்கும் தொல்காப்பியம் முழுமையான நூல் அல்ல. கருத்தோட்டத்தில் இடைவெளிகள் காணப்படுகின்றன. முழுமையான நூலைத் தேட வேண்டும்.
2. இடைச் செருகல்கள் நிறைய உண்டு. இதைப் பற்றி நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற பல தமிழறிஞர்கள் ஆய்வு செய்துள்ளனர். ஆண்டுக் காண்க.
தொல்காப்பிய உரை விளக்கத்தில் காணக்கிடைக்கும் குழப்பங்கள் பெரும்பாலானவற்றுக்கும் இவையே காரணங்கள் என்று கருதுகிறோம். தனி நூல் வேண்டும் பொருள் அது. இங்கு இடமில்லை. உள்ளுறை, இறைச்சி-இவையே இப்போது நம் கவனப்பொருட்கள். எம் ஆய்வில் யாம் அடைந்திருக்கும் பொதுவான முடிவு: உவமம் வெளிப்படையானது. உள்ளுறை குறிப்பால் உணர்த்தப் பெறும். இறைச்சி குறிப்புகளும் அற்று, ஆனால் குழூஉக் குறிகளால்-ஜென் புதிர் போல-மொழியின் மூலம் மொழியைக் கடந்து உணர வைக்கப்படும். மெய்ப்பொருள் நுணுக்கரிய நுண்ணுணர்வு. இமைப் பொழுது, அணுஅளவு, நேநோ செகண்டு இவற்றைப் போல கோடி கோடி மடங்கினும் நுட்பமானது இறைப்பொழுது, இறையளவு. இறை-உணர்வு நிலை, மெய்யறிவு. ‘சி' அந்நிலையில் தோன்றும் ஆற்றல் (Power, force). அவற்றைச் செய்யுளில் உணர வைக்கும் யோக நெறி ‘இறைச்சிப் பொருள்.' முழுமையான யோகி, முற்றுணர்ந்த ஞானி, வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் காண்பது, பயன்படுத்துவது இறைச்சிப் பொருள். எத்துணை அளவு இறைச்சிப் பொருள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அந்த அளவு முதனூல்; அந்த அளவே அதன் ஆயுள். திருக்குறள், திருவருட்பா போன்ற வேதங்கள் எக்காலத்திலும் அழியா. ஏனெனில் முழுதும் இறைச்சியால் ஆனவை அவை. ஒரு விதி யாம் கண்டது. அறிஞர் ஆய்க. மறையாக எழுதப்படும் முதனூலின் முதல் செய்யுள் இறைச்சியுடன் தொடங்கும். இடைச் செருகலை அறிய இது ஓர் உத்தி. ‘அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்' என்று தாயுமானவர் தம் நூலைத் தொடங்குவதும், ‘திரு ஓங்கு' என்று அருட்பா துவங்குவதும், ‘அகர முதல எழுத்தெல்லாம்' என்று ஆதி மறை ஆரம்பிப்பதும் பேசா இம் மரபின் வழிப்பட்டவை.
இறைச்சியொ டுள்ளுறை ஈண்டறிந்தார், காண்பார்
புறத்தொ டகத்துப் பொருள் -சித்பவானந்தம்
புறம் என்பது உலகும், உடலும். புறப்புறம் மனம். அகப்புறம் உயிர். அகம் இறை. அகத்துப் பொருள் இறைப்பொருள்.
பெருவிரல் விதியாக (Thumb rule) ஒன்றை வைத்துக் கொள்ளலாம். உள்ளுறை என்பது உயிர். இறைச்சி என்பது இறைநிலை உணர்வு.
அறிவு அற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும் உள் அழிக்கலாகா அரண்
என்ற குறட்பாவில் ‘உள்' என்ற சொல்லை உயிர் என்ற பொருளிலேயே வாலறிவன் உணர்த்துகிறான்.
தமிழ் மரபின் நோக்கமும் தொடக்கமும் தொடர்ச்சியும் யாவும் மறந்து பிற மொழிக் கவர்ச்சியின் பால் சிக்குண்டு அம்மொழிகளின் மரபுக் கண் கொண்டு பார்க்கும் வரை உண்மை புலப்படாது. பார்வையிலுள்ள பழுதை முதலில் நீக்கிக்கொள்ள வேண்டும்.
குறிப்புப் பொருளை உணர்த்த வந்த உத்திகள் உள்ளுறையும் இறைச்சியும். ஆனாலும் செயல்பாட்டில் வேறுபட்டு நிற்கும்.
‘‘உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள் முடிகஎன
உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம்''
‘‘இறைச்சி தானே பொருட்புறத் ததுவே'' -தொல்காப்பியம்.
‘இப்படிப் பொத்தாம் பொதுவாகப் பேசுகிறீர்கள். எனக்குப் புரியவில்லை' என்று நான் புகார் சொன்னபோது என் தமிழாசிரியர் கூறியது: ‘‘பல பிறவிகள் பல ஆண்டுகள் தொடர்ந்து சாணித்தலின் (தியானித்தலின்) மூலமே உய்த்துணர முடிவதை ஒரு நொடியில் ஒரு சொல்லில் தெரியப்படுத்து என்கிறாய். இளமையின் பொறுமையின்மை இது. அறிவில் சோம்பல் இது. தமிழ் மரபை, நெடுங்கணக்கின் மரபை, இலக்கண இலக்கிய மரபை ஊன்றிப் படி. மாளா ஆக்கை பெற்ற சித்தர்களால் எழுதப்பட்டவை அவை. பேரருளாளர்கள் அவர்கள். உயிரால் கேள். இறைஞ்சு. உண்மை உரைக்க என்று கண்ணீர் விடு. அழுதால் இறைப் பொருளைப் பெறலாம்- மாணிக்கவாசகனைப் போல, இராமலிங்கரைப் போல. ஒரு குறிப்பு தருகிறேன். நூலைப் பிடித்துக்கொண்டு மேலேறிச் செல். புகழ் பெற்ற சங்கப் பாடல் ‘யாயும் ஞாயும் யாயாகியரோ...' அதில் ‘செம்புலப் பெயல் நீர்' என்ற சொற்றொடர் எதைக் குறிக்கிறது? உரையாசிரியர்கள் போல் உலகியல் சார்ந்து ‘செம்மண்ணில் விழுந்த மழை நீர்' என்று அகராதிப் பொருள் கொண்டால் விழிப்பு நிலைக்கு இன்னும் நீ வரவில்லை என்று பொருள். பல்கால் ஆய்ந்து தம் உள்ளுணர்வால் உணர்ந்து உரைத்தார் மலையாள ஐயப்ப பணிக்கர்: திராவிட மொழிகளின் அழகியல் மறைத் தொகுதி தொல்காப்பியம்.
அறிஞர் குழுக்களின் தொடர்ந்த ஆய்வை வேண்டி நிற்பது உள்ளுறை மற்றும் இறைச்சிக் கோட்பாடு. வாலறிவு பெற விழைவோர் செல்ல வேண்டிய பாதை. இறைநிலையை ‘சச்சிதானந்தம்' என்ற சொல்லால் உணர்த்துவர் வட நூலார். இது வட சொல்லா? மூலக் கருத்துகள் ஆதித் தமிழ் மரபின் சொத்து. சத்+சித்+ஆனந்தம் என்பவற்றில் ‘ச' இறைநிலை உண்மை, என்றும் அழியாமை. என்றும் உள்ள பொருள். ‘சி' இறைநிலை அறிவும் ஆற்றலும். ஆனந்தம் படைப்பினால் தோன்றும் மட்டற்ற களிப்பு. 'ஆ' எனில் ஆன்மா, உயிர், எல்லையில்லா இன்பத்தால் தோன்றும் வியப்புணர்வு. ‘ஆ! செத்தேன்' என இறைநிலை அனுபவத்தை மாணிக்கவாசகர் விவரிப்பார். மனம் என்ற கொள்கலத்தால் தாங்க முடியாத உயிரனுபவம், அருளனுபவம் மற்றும் இறையனுபவம் என்று வகைப்படுத்தி விளக்குவார் இராமலிங்கர். மனம் செத்தால் ஆனந்தம். மனம் வரை மனித நிலை. கடந்தால் மேல்நிலை. ‘சத் (அ)-இறைநிலை. ‘ச' இறங்கி வந்தால் ‘சி' (உ) அருட்சக்தி. அகர உகரக் கலப்பினால் மகரம் என்ற படைப்பு உலகம். படைப்பினால் ஆனந்தம். இறை, அருட்சக்தி, உயிர்கள் மூன்றும் ஒன்றே. விரிப்பின் படைப்பு. ஒன்றினால் தனிமை.
ஒளி (தீ), காற்று (உயிர்ப்பு), வெளி-மூன்று நிலைகளும் ஒன்றானது அநாதி இறைநிலை என்பார் திருமூலர். சிவவெளி, சிவ ஒளி, (சிவச் சுவாசம்) வேகாக் கால் என்பன அவர் கையாளும் சொற்கள். உயிர் பேருயிரின் உடம்பில் ஒரு செல். அருட்பெருஞ் சோதியின் ஒரு பொறி.
வேத காலத்திற்கு முற்பட்ட ஒரு மரபு, மெசபடோமிய, சால்டிய (Chaldean civilization) நாகரிகத்திற்கு முற்பட்ட ஒரு மரபு தமிழ் மரபு. உலகின் எட்டுத் திசை ஞானிகளும் ஏற்றுக் கொண்ட உண்மை இது. வடமொழி வேத வேதாந்தங்களைக் கரைத்துக் குடித்த பின் அவற்றிலுள்ள பூட்டுகளுக்கெல்லாம் திறவுகோல்கள் தமிழில்தான் உள்ளன என்பதைத் தன் உள்ளுணர்வு உணர்த்த தென்திசை நோக்கிப் பயணம் செய்து புதுச்சேரியில் ஆசிரமம் அமைத்து, நிரந்தர வீடாக்கிக் கொண்டு தமிழ்ச் சித்தர் நெறியை ஏற்றுக்கொண்டு பரிணாம விஞ்ஞானத்தின் துணையுடன் அழகான ஆங்கிலத்தில் கவிதைகளாக, கட்டுரைகளாக, யோக நூல்களாக, தத்துவ நூல்களாக அதை உலகறியச் செய்த மகான் அரவிந்தர். அவருடைய கொள்கையான சித்தர் நெறியைத் தன்னளவில் தானே ஞானத்தில் கண்டடைந்து பாரீஸ் நகரிலிருந்து பாண்டிச்சேரி வந்து அவருடன் இணைந்து உலகளாவிய ஓர் அமைப்பைத் தோற்றுவித்த இயக்கமாக்கியவர் அன்னை மிர்ரா. உலகின் ஆதி மரபைப் பற்றி ஸ்ரீஅரவிந்தர் சொன்னது, ‘‘...a tradition older than the veda and the chaldean tradition.'' இவ்வாறு அவர் அறிவித்ததன் காரணம் சித்தர் நெறியே (அண்டத்தில் உள்ளது யாவும் பிண்டத்தில் உண்டு) மனிதனின் உண்மையை முழுமையாக அறிந்து உரைத்தது என்பதால்தான்.
‘Man the microcosm... (It) had a higher opinion of mankind, putting it ofdern above the gods, and always saw the human being as a microcosm, the cosmos in miniature, containing or at least reflecting in itself everything the cosmos contains... All things are; potentially contained in that substance that constitutes man... In an essential way, each being contains in itself all the universal potentialities.'OVERMAN - Georges Van Vrekhem - Rupa@co.2001
இதை 'சீவன் என சிவன் என வேறில்லை' என்று உணர்த்துவார் திருமூலச் சித்தர்.
திணைக் கொள்கை இவை யாவற்றையும் உள்ளடக்கியது. திணை இரண்டு: அஃறிணை, உயர்திணை. அஃறிணையே சடத்திலிருந்து உயிராகித் தாவரமாகி, விலங்காகி, மனிதனாகி உயர்திணை ஆகிறது. மனம் மேல் நிலை மனமாகி, அதி மனமாகி வாலறிவு பெற்று இறைநிலை அடைவது வரை பரிணாம வளர்ச்சி. இவை யாவும் திணைக் கொள்கையின் உட்பொருள். திணை=த்+இணை. உடலுக்கு இணையானது.
திணைகள் புறத்திலும் அகத்திலும் ஐந்து. முதற் பொருள் நிலமும் பொழுதும். அகத்திணைகள் சிந்தனையால் மாற்றம் பெற்று உயிர் பெற்று ‘செம்புலம்' ஆவதை ‘வான் புரிதல்' என்பர் சித்தர்கள். மண்மாண் நுண்மாண் ஆவதும், அழியும் மனித உடலில் எழிலும், நலமும் அழியாத இறைநிலை அடைதலும் திணைக் கொள்கையின் இறைச்சிப் பொருள்.
கோடு போடுகிறேன். இராஜபாட்டை ஆக்குவது எதிர்கால அறிஞர்தம் பணி. புதிய பார்வை தருவது என் கடமை. அத்திசையில் பயணித்து ஆதிச் சித்தர் மரபை மீட்டெடுப்பது தொடர்ந்து வரும் தலைமுறையினரின் பணி. நூறு வெளிச்சங்களில் தொண்ணூற்று ஒன்பது மின்மினிகளானாலும் ஒன்று உண்மை உள்ளொளியானால் அந்த அளவு ஆன்ம இலாபம் தானே? குற்றங்களைத் தள்ளி குணம் கொள்க அறிவுடையோர்.
http://www.tamizhini.com/article19.html
Saturday, August 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment