சித்தர்கள் கூடுவிட்டுக்கூடு பாய்தல்... ஒரே நேரத்தில் இரண்டு மூன்று இடங்களில் தென்படுதல்... சட்டென்று மறைந்து தோன்றுதல் போன்ற எண்ணற்ற சித்தாடல்களை செய்திருக்கிறார்கள். 'இதெல்லாம் சாத்யமா?'என்று நாம் யோசிக்கத்தோன்றும் அவர்கள் அதையெல்லாம் நிஜம் என்று உணர்த்துகிறார்கள்.
மனித உடல் ஐந்து வகை என்கிறார்கள். முதலில் உயிர்க்காற்றால் வளர்க்கபடுகிறது காற்றுடல் அடுத்து உணர்வுகளினால் வளர்க்கப்படுகிறது. மன உடல் அடுத்து எண்ணங்களால் உருவாக்கப்படுகிறது அறிவு உடல். அதற்கடுத்து உணர்வுகளால் வளர்க்கப்படுகிறது. மன உடல். இந்த மூன்றிற்கும் மையமாக பேரின்ப உணர்வில் வளர்க்கப்படுகிறது. இன்ப ஆனந்த உடல். ஆக... அன்னமய உடல் பிராணமய உடல் மனோமய உடல் விஞ்ஞான மய உடல் ஆனந்த மய உடல் என ஐந்து வகை உடல்களை ஒவ்வொரு மனிதனும் பெற்றிருக்கிறான். என்கிறார்கள். இந்த ஐந்து உடல்களும் ஆன்மா என்கிற உயிருக்கு மேலே ஒன்றின் மீது ஒன்றாக பதிந்திருக்கின்றன. ஆனால் இவை ஒன்றையொன்று ஊடுருவிச் செல்லும் தன்மையுடையது. எங்கும் நிறைந்து ஒளி வீசும் நுண்ணிய உணர்வு படிப்படியாகத் நுண்மையை இழந்து பருமையாகி நம் கண்களுக்கு தெரிகிற பரு உடலாகிறது என்கிறார்கள் சித்தர்கள்.
அப்படியென்றால் உயிரின் பணி என்று கேட்கலாம். நம் ஆன்மா என்பது உடல் என்கிற மரப்பொம்மையை அசைய வைக்கிற சக்தியாகும். சித்தர்கள் ஆன்மாவை திடமாக நம்பியவர்கள். "உயிரு நம்மையால் உடலெடுத்து வந்திடும்" என்கிறார் சிவவாக்கியர். அதே போன்று "உயிர்த்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்ற தப்புவில்" என்கிறார் கடுவெளிச்சித்தர். "உயிரெனும் குருவி விட்டோடுங்குரம்பை" என்று உயிரை உடலில் குடியிருக்கும் பறவையாக குறிப்பிடுகிறார் பட்டினத்தார். உடலை ஆட்டுவிப்பது உயிர் என்பதை குறிக்கும் விதமாக "நந்த வனத்திலோர் ஆண்டி" பாடலில் விளக்குகிறார் திருமூலர். அதுமட்டுமல்ல "சூரியனின் வெப்பத்தால் கடல் நீர் உப்பாகிறது. அந்த உப்பு மீண்டும் தண்ணீரில் கரையும் போது தண்ணீரில் அடங்குகின்றது. உப்பு எங்கிருந்து வந்ததோ அங்கேயே அடங்குவதைப்போன்று உயிர் சிவத்திலிருந்து தோன்றிச் சிவத்துக்குள்ளேயே அடங்கும்" என்கிறார்.
உயிர்கள் நான்கு வகைத் தோற்றமாகவும் ஏழு வகைப் பிறப்பாகவும் என்பத்து நான்கு லட்சம் உருவ வேற்றுமைகளோடும் பிறக்கின்றன என்கிறது சிவஞான சித்தரின் நூல். அதிலும் பட்டினத்தார் தனது பாடலில் "புல்லாகி பூண்டாய் . கல்லாய் மரமாய் கீரியாய் நரியாய் ஊர்வனவாய் பூதமொடு தேவருமாய் வேதனை செய்வதானவராய் உயிர்கள் பிறக்கின்றன என்கிறார்.
ஆக சித்தர்கள் ஆன்மாவையும் உடலையும் மிக துள்ளியமாக அறிந்து உடல் இயக்கத்தை ஆராய்ந்த நூல் தான் அவர்களால் 'மாயை' என்கிற அமானுஷ்யத்தை நிகழ்த்த முடிந்தது. கூடுவிட்டு கூடு பாய்தல் பல இடங்களில் தோன்றி மறைதல் போன்ற அற்புதங்களை செய்ய முடிந்தது.
இப்போது நீங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கூரில் வாழ்ந்து பல சித்தாடல்களையும் ஆச்சர்யங்களையும் நிகழ்த்திய மகடிச் சித்தரைப் பற்றி அறியப் போகிறீர்கள்.
மகடி சித்தர்
ஒல்லியமான தேகமும் கூர்மையான பார்வையும் கருமையான தாடியுமாக திருவிதாங்கூர் நகரில் சுற்றித்திரிந்த இந்த சித்தர் நம் சம காலத்தை சார்ந்தவர் இவர் 1950லிருந்து 1955_க்குள் ஏகப்பட்ட அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கிறார்.
இவர் ஒரு இஸ்லாமியர் என்றாலும் மத வேறுபாடுகள் இல்லாமல் தன்னை நாடி வருபவர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்திருக்கிறார். பல மொழிகள் பேசத் தெரிந்த இச்சித்தர் யார் என்ன மொழியில் தங்கள் குறைகறைச் சொன்னாலும் உடனே அதை கேட்டறிந்து அவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே நல்லாசி வழங்குவார்.
சித்தர் கண்கள் மிகவும் ஒளிப்பொருந்தியவை. அவரது கண்களை சாமான்யமானவர்கள் நேருக்கு நேராக பார்க்கவே முடியாது. அவராக நம் கண்களை ஒரு நொடி கவனித்தாலே போதும். நமக்குள் மெலிதாக அதிர்வு ஏற்படும். அடுத்தநொடி நம்மையறியாமல் நம் பிரச்சனைகளை ஒளிவுமறைவு இல்லாமல் அவரிடம் சொல்லிவிடுவோம்.
தீராத நோய் கடல் தொல்லை. பிள்ளைபேறு இல்லாமை என எந்த பிரச்சனையானாலும் அவர் தனது அமானுஷ்ய சக்தியால் குணப்படுத்திவிடுவார்.
அவர் அங்கே நிகழ்த்திய அற்புதங்களை கேட்கும் போது நமக்குள் வியப்பு ஏற்படும்.
1950 ஆம் வருடம் அவர் திருவனந்தபுரம் கன்னியாகுமரிக்கு இடையே அப்போது இயங்கிக் கொண்டிருந்த சிண்டிகேட் பஸ்ஸில் சென்றுக் கொண்டிருந்தார். பஸ்ஸில் இருந்தவர்களில் பலர் அவரது அமானுஷ்ய சக்தியை அறிந்தவர்கள் என்பதால் சித்தரை நெருங்கி தங்கள் குறைகளை சொல்ல முற்பட்டனர். ஏகப்பட்ட மனிதர்கள் தன்னை நெருங்குவதில் திகைப்படைந்த சித்தர்.. பஸ் சுசீந்திரம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது சரேலென பஸ்ஸிலிருந்து தாவி ஆற்றுக்குள் குதித்துவிட்டார். பஸ்ஸிக்குள்ளே இருந்தவர்கள் அதிர்ச்சியாய் பஸ்ஸை நிறுத்தச் சொல்லிவிட்டு ஆற்றக்கரைக்கு ஓடி வந்தனர். அங்கே சிரித்த முகமாய் தண்ணீருக்குள்ளிருந்து வெளிப்பட்ட சித்தர்... "நீங்க போங்க நான் குளிச்சிட்டு வர்ரேன்" என்றார். அடுத்த நிமிடம் பஸ் புறப்பட... பஸ்ஸினுள்ளே எல்லோருடைய பேச்சும் சித்தரைப் பற்றியே இருந்தது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பஸ் தக்கலை வந்த சேர்ந்தது. அப்போது தக்கலை பஸ் நிறுத்தத்திற்கு அருகே இருந்த ஒரு மண் திண்டின் மீது சித்தர் சம்மணமிட்டு அமர்ந்திருக்க... பஸ்ஸிலிருந்த அத்தனைபேரும் ஆச்சர்யமாய் சித்தரை பார்த்தனர். 'சுசீந்திரம் பாலத்திற்கு கீழே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இவர் எப்படி தக்கலை பஸ் நிலையத்திற்கு வந்தார்? அந்த வழியாக வருவது இது ஒரு பஸ் தானே. எப்படி. எப்படி அவரால் இது முடிந்தது?" கேள்வியாய் அவர்கள் பார்க்க... சிரித்த படியே சித்தர் "எனக்கு ஒண்ணும் ஆகலேன்னு சொல்லத்தான் இங்கே காத்திருந்தேன். வரட்டுமா?" என்று சொல்லிவிட்டு நகர ஆரம்பித்தார். இது போன்று ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றிய அதிசயத்தையும் சித்தர் நிகழ்த்தியிருக்கிறார். ஒரு முறை திருவிதாங்கூரில் வாழ்ந்த சில கட்டிடத் தொழிலாளர்கள் கட்டுமான வேலைக்காக ஆஸ்திரேலியா செல்ல இருந்தனர். அதற்கு முன்பாக சித்தரிடம் ஆசி பெறும் விதமாக அவரை வணங்கச் சென்றனர். அவர்கள் எதற்காக தன்னிடம் வந்திருக்கிறார்கள் என்பதை தனது அமானுஷ்ய சக்தியால் உணர்ந்து கொண்ட சித்தர். "கடல் தாண்டி வேலைக்கு போறீங்களா? போய்ட்டு வாங்க ஒரு குறையும் இருக்காது" என்று சொல்ல. அவர்கள் நன்றியுணர்வாய் சித்தரை வணங்கிவிட்டு நகர்ந்தனர். அதில் ஒருவர் 'நான் சித்தரிடம் என் மகளின் கல்யாணம் இந்த வருடத்திற்குள் நடந்துவிடுமா?' என்று கேட்கலாம் என நினைத்தேன். அதற்குள் நீங்கள் அழைக்கவே கேட்காமலே வந்துவிட்டேன் என்றார். அன்றே அவர்கள் சென்னை பயணமாகி அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவில் அவர்களது கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்க ஒரு நாள் அவர்கள் வேலை பார்த்த இடத்திற்கு மகடி சித்தர் வந்தார். எதிர்பாராத விதமாக சித்தர் எப்படி இந்த நாட்டிற்கு வந்தார்? என்று அத்தனை பேரும் ஆச்சர்யமுகமாய் அவரைப் பார்த்தனர். உடனே சித்தர் தன் மகளின் திருமணம் பற்றி கேட்க மறந்த நபரை நெருங்கி "உன் மகளுக்கு அடுத்த ஆறு மாதத்திற்குள்ளாக கல்யாணம் நடந்திடும் அதுக்குள்ளே உங்க வேலை முடிஞ்சு நம்ம ஊருக்கு வந்திடுவீங்க "இதை சொல்லத்தான் இங்கே வந்தேன் வரட்டுமா?" என்று நகர எல்லோரும் ஆச்சர்யமாய் அவரை பார்த்தனர். சித்தர் சொன்னது போலவே அவரது வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்த்து சம்மதித்து விட்டதாக கடிதம் வர அந்த நபர் ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்றனர். அதை விட தங்கள் வீடு தேடி வந்து சித்தர் ஆசி வழங்கிவிட்டு போனதாக எழுதியிருந்ததைப் படித்து மேலும் ஆச்சர்யமானார்.
அடுத்த ஆறுமாதத்திற்குள்ளாகவே அவர்களின் வேலை முடிந்துவிட திருவிதாங்கூர் திரும்பிய அவர்கள் சித்தரிடம் செல்ல... "எல்லாம் புரிந்தவர் போன்று" அவர்களை பார்த்து மெல்ல புன்னகைத்தார் சித்தர். உடனே அவர்கள் சித்தர் ஆஸ்திரேலியா வந்திருந்த விஷயத்தை சொல்ல அதை நம்ப மறுத்த கிராமத்தினர் "இவர் இங்கே தான் இருக்கிறார். இங்கிருப்பவர் விசா பாஸ்போர்ட்இ பணம் இல்லாமல் எப்படி ஆஸ்திரேலியா வர முடியும்?" என்று கேட்க.. அவர்கள் சித்தரின் அமானுஷ்ய சக்தியை ஊருக்கு எடுத்துரைக்க எல்லோரும் அவரை திகைப்பாக வணங்க ஆரம்பித்தனர்.
இந்த அற்புதங்களைப் போலவே சுடுகாட்டில் இரவு நேரத்தில் தனது உடலை கைவேறு கால் வேறு என தனித்தனியாக அவர் பிரித்து போட்டிருந்ததைப் பார்த்து பலரும் அதிர்ச்சியும். ஆச்சர்யமும் அடைந்திருக்கிறார்கள்.
சித்தரை பொறுத்தவரை அவர் முன்னே பசியோடு பிணியோடு யாரும் இருக்கக் கூடாது. ஊருக்குள்ளே எங்கே பசியும் பிணியும் இருக்கிறதோ அங்கே ஓடோடிச் சென்று உதவுவார்.
பசித்தவர்கள் வீட்டின் முன்னே உணவுப்பொருட்களை வைத்து 'மகடி' என்று குரல் கொடுப்பார்... அடுத்த நொடி வீட்டுக்குள்ளே இருப்பவர்கள் வெளியே வந்து பார்த்தால் உணவு மட்டும் இருக்கும்.
அவர் இருக்க மாட்டார். அதே போல் பிள்ளை பேறு இல்லாதவர்கள் தன்னை தேடி வந்தால் தன் கையில் இருக்கும் உணவுப் பொருளை கொடுத்து சாப்பிடச் சொல்வார். அதை சாப்பிட்ட அவர்களின் வயிற்றில் கண்டிப்பாக குழந்தை உருவாகிவிடும்.
சித்தரின் அருளால் குணமடைந்த பல செல்வந்தர்கள் அவர் கேட்டதை அள்ளித்தர தயாராக இருந்தனர். ஆனால் அவர் கிழிந்த துணியும் தண்ணீரும் மட்டுமே தனக்கு போதும் என்றார். பிரதியுபகாரம் கருதாது அவ்வூரில் ஏக்கப்பட்ட நன்மைகள் அருளிய சித்தர். ஒரு நாள் ஒரு பெட்டிக்கடைக்காரர் தன்னை ஒரு பாக்கு வெட்டியால் தாக்க முயன்றதால் அந்த கடைக்குள்ளேயே தூக்கில் தொங்கினார். உடனே போலீசுக்கும் டாக்டருக்கும் தகவல் தரப்பட்டது. அவர் உடலை கயிற்றிலிருந்து வெளியே எடுத்து போஸ்ட் மார்டத்துக்கு ஆயுத்தமாயினார். டாக்டர் கூரிய கத்தியை எடுத்த நொடியில் சித்தர்கள் சடாரென கண்களைத் திறந்து துள்ளிக் குதித்து ஓடினார். சுற்றிலும் இருந்தவர்கள் அதிர்ச்சியாய் சித்தரை பார்த்தனர். அவர் புன்னகை முகமாய் "அவ்வளவு சீக்கிரம் உங்களை விட்டு போகமாட்டேன். இங்கே எனக்கு நிறைய வேலை இருக்கு. அதையெல்லாம் முடிச்சிட்டு தான் போவேன்" என்றார். அவர் சொன்னது போலவே அதற்கு பிறகு. எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திவிட்டு திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டார். அவர் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. திருவிதாங்கூர் புதுப்பள்ளிக்கு எதிரே அவர் சமாதிக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு சென்ட் நிலமும் புளியமரமும் அவரின் புனிதத்தை இன்றும் உணர்த்தி கொண்டிருக்கிறது. நீங்களும் அங்கே சென்று அந்த புனித பூமியை தரிசித்துவிட்டு வாருங்கள் உங்களுக்கும் நலம்பல வழங்குவார் அந்த மகா சித்தர்.
http://groups.google.ge/group/Piravakam/msg/735a53f849265467?
Saturday, August 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment